பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு 30 கிலோ சந்தன கட்டையை கடத்த முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் எஸ். நாகூர் கிராமத்தில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அருகில் இன்று காலை இரண்டு பேர் சாக்கு மூட்டையுடன் இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் இது குறித்து வடக்கிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வடக்கிபாளையம் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் எருத்தன்பதி பகுதியைச் சேர்ந்த விக்ரம் தர்மா (24), பொள்ளாச்சி அருகே நடுப்புணியைச் சேர்ந்த அண்ணாமலை (47) என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டதில் அதில் சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் கேரள மாநில பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சுமார் 30 கிலோ எடை கொண்ட சந்தனக்கட்டையை எஸ்.நாகூர், ஆர்.வி.புதூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
சந்தனக்கட்டையை கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் (56) என்பவரிடம் கொடுக்க இருந்ததாக தெரிவித்ததால் போலீஸார் அப்துல் சலீமையும் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து சந்தனக் கட்டை கடத்தலில் தொடர்புடைய மூவரையும் கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பொள்ளாச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.