மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை


கோவையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தான் ஆய்வு செய்ய உள்ளதாகவும், மக்கள் பணியை லட்சியமாக கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும், செயல்பாடுகளும் தமிழக மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்ய, முதல்வர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்ய உள்ளதாக நாமக்கல்லில் அறிவித்தேன். அதன்படியே, நவ.5, 6 ஆகிய நாட்கள் கோவையில் ஆய்வுக்குப் பயணமானேன்.

மேற்கு மண்டல திமுகவில் ஓட்டை விழுந்து விட்டதுபோல், அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கழகத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை அங்கு தரையிறங்கியதும் உணர முடிந்தது. கள ஆய்வில் முதல் நிகழ்வான, எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவைத் திறக்க புறப்பட்டபோது, 6 கி.மீ. நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம். அவர்கள், கையசைத்து, ‘அடுத்ததும் உங்க ஆட்சிதான்’ என்று மனதார வாழ்த்தினர்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், எல்காட் நிறுவனத்தின் சார்பிலான புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைத்தேன்.

அடுத்த நிகழ்வாக, கோவை மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களையும் சார்ந்த மக்கள் சட்டப்பேரவை தேர்தலின்போது முன்வைத்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றும் நிகழ்வாக, கோவையி்ல், நில எடுப்பு விலக்களிப்பு ஆணைகளை வழங்கினேன். அதை பெற்றுக்கொண்ட மக்கள் நன்றி துளிர்த்ததைக் கண்டேன்.

மதிய உணவுக்காக சர்க்யூட் ஹவுஸ் செல்லும்போது, கோவையைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு ஒன்றை நம்பிக்கையுடன் அளித்தனர். அதைப் படித்துப்பார்த்த பிறகு, மாலையில் தங்க நகை உற்பத்தியாளர்கள் பணி செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களின் பட்டறைகளைப் பார்வையிட்டேன்.

அவர்களின் பணியிடங்கள் மிகமிக எளிமையானதாக, நெருக்கடி மிகுந்ததாக இருப்பதைக் கண்டேன். அதிகாரிகளுடன் ஆலோசித்து உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவை குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி செலவில் தொழில் வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டேன்.

அதன்பின் கட்சியினரைச் சந்தித்து, அவர்களுடைய செயல்பாடுகளை ஆய்வு செய்தேன். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்.

நவ.6-ம் தேதி அரசு திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு நிகழ்வாக கோவையில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டினேன். கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும், தொண்டர்களின் உற்சாகத்தையும் கண்டேன். இதைத்தொடர்ந்து, நவ.9, 10-ம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன், தமிழகம் முழுவதும் தொடர்வேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

x