அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்


அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா, செல்லாதா என்ற பிரதான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அறிவித்தது உட்பட பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘‘கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து நான் உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன்’’ என்று நீதிபதி தெரிவித்தார். இந்த உரிமையியல் வழக்குகள் மீதான விசாரணையை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

x