புதுச்சேரி: புதுச்சேரியில் மாத இதழ் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இன்று மாலை வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி பெருங்கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.
கட்சியின் மாநிலப் செயற்குழுக் கூட்டத்தையும் கூட்டி தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகளை விமரிசிக்க நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு உரிமையுள்ளது. திராவிடம் குறித்து பேசும் விஜய், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களையும் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மக்கள் வாழ்வாதாரப் பிரச்னையான, அவர்களின் வாழ்க்கைக்கான பொருளாதாரம் குறித்து பேசுவது அவசியமானது.
அதைத்தீ ர்மானிப்பது அரசியல் கட்சியின் பொருளாதாரக் கொள்கையாகும். ஆகவே, நடிகர் விஜய் பொருளாதாரக் கொள்கை குறித்து பேசவில்லை. அவரது செயற்குழுக் கூட்டத்திலும் பொருளாதாரக் கொள்கை குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. இதுகுறித்து விஜய் விளக்க வேண்டும். அதன் பிறகே அவரது இயக்கம் குறித்து கூற முடியும்.
விஜய்யின் செயல்பாடுகளே அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். மத்தியில் பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். அதனடிப்படையில் தான் இந்தியா கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.