சென்னை: மாவட்ட வாரியாக அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், தேர்தல் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக அரசின் நிர்வாகம் மேம்பட, தமிழக முதல்வர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வேண்டுகோளை முழு மனதோடு ஏற்று, மாவட்டம் தோறும் நடக்கும் மக்கள் நல திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய களப்பணிக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்கள்.
இது தேர்தலுக்காக நடத்தப்படும் கள ஆய்வா? உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடத்தப்படும் கள ஆய்வா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும். ஏனென்றால் வாக்கு வங்கி அரசியலுக்காக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது மீண்டும் தேர்தல் பணிக்கு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையிலே, தமிழக அரசின் சார்பாக, "மக்கள் நல களப்பணி" என்ற பெயரால் முதல்வர் ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை ஏமாற்றாமல், மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்தப்படும் வகையில் சமூக அக்கறையுடன், தாயுள்ளத்துடன் செயல்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து அவர்களுக்கான முழுமையான வழிகாட்டல் நெறிமுறைகளை முதல்வர் உருவாக்க வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் தமிழக முதல்வரின் மக்கள் நல செயல்பாடுகளுக்கு பாஜக துணை நிற்கும். இதேபோல், மத்திய அரசின் மீது வீண் பழிகளை சுமத்தி விளம்பர அரசியல் செய்யாமல், மத்திய அரசுடன் துணை நின்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும். எனவே, தேர்தல் அரசியலை மறந்து மக்கள் நல அரசியலை முன்னெடுத்து மாவட்ட தோறும் தன்னுடைய களப்பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என்று ஏ.என்.எஸ். பிரசாத் கூறியுள்ளார்.