ராமேசுவரம்: திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார் மற்றும் மைக்கேல் பெர்னாண்டோ ஆகிய இருவரும் 10.06.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் இஞ்சின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இந்த இரண்டு மீனவர்களும் நாகை மாவட்டம் ஆற்காடுத்துறை மீனவர்களால் நடுக்கடலில் மீட்கப்பட்டு மெரைன் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டு மீனவர்களும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த இரண்டு மீனவர்களையும் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்து இலங்கைக்கு அழைத்து வர வலியுறுத்தி யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை தாலுகா அலுவலகம் முன்பாக அனலைதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
''விஜயக்குமார், மைக்கேல் பெர்னாண்டோ இரண்டு மீனவர்களும் ஐந்து மாதங்களாக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகு இயந்திரக் கோளாறினால் எல்லை தாண்டிச் சென்றதால் இருவரையும் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்'' என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்களால் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.