வட்டாட்சியர் அதிகார துஷ்பிரயோகம் - வண்டலூர் தாலுகா விஏஓ-க்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


வண்டலூர்: வண்டலூர் தாலுக்காவில் வட்டாட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டித்து வண்டலூர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருவாய் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் வட்டாட்சியராக இருப்பவர் புஷ்பலதா. இவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு கீழ் பணிபுரியும் வருவாய் உதவியாளர்கள் 17 பேருக்கு மெமோ வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மெமோ வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டால் வட்டாட்சியர் சரியாக பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று கிராம உதவியாளர் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராமங்களில் வருவாய் துறை தொடர்பான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: "கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மழைக் காலங்களில் அந்தந்த கிராமத்திலேயே பணியாற்ற வேண்டும் என்பது விதி. ஆனால், வட்டாட்சியர் அதனை மீறி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிய அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதனை மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோல் கிராம நிர்வாக அலுவலர்கள் அனுப்பிய அறிக்கையை பார்க்காமல், பணி செய்யவில்லை எனக் கூறி நடவடிக்கை எடுக்கிறார். இதுபோன்று அவர் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவரிடம் முறையிட்டபோது அவர் மரியாதைக்குறைவாக நடந்து கொள்கிறார். எனவே இதற்கு சுமுக தீர்வு காணும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்" என்று சங்கத்தினர் கூறினர்.

x