மாமல்லபுரம் நியாயவிலை கடைகளில் உணவு துறை செயலாளர் ஆய்வு: உணவு பொருட்கள் தட்டுப்பாடுன்றி கிடைப்பதாக தகவல்


மாமல்லபுரம் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் நேற்று ஆய்வு செய்த உணவுத்துறை ராதாகிருஷ்ணன், ரேஷன் கடைகளில்பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப் படுவதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் தெருவில் உள்ள நியாயவிலை கடை மற்றும் ஐந்து ரதம் செல்லும் பகுதியான அண்ணா நகரில் அமைந்துள்ளநியாயவிலை கடைகளில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், பணியாளர்களிடம் கடையில் இருப்பு உள்ள பொருட்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கடையில் உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், பொதுவிநியோக திட்ட துணை பதிவாளர் சற்குணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர், உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நியாயவிலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பணிகள் காரணமாக நியாயவிலை கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது தாமதமானது. தற்போது, அனைத்து பகுதியிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதால், கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

அரசி கடத்தலை தடுப்பதற்கு டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் 4 எஸ்பிக்கள் கொண்ட 500பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர். இதுவரை, உணவு பொருட்கள் கடத்தல் தொடர்பாக 9 ஆயிரம்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 28 ஆயிரத்து 802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடத்தல் சம்பவம் தொடர்பாக 9,543 பேர் கைது செய்யபபட்டுள்ளனர். இதில்,72 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

x