செயற்கை நுண்ணறிவு இயக்கம் செயல்பாட்டுக்கு வருகிறது: ரூ.14 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு


சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (‘ஏ.ஐ’), சமீபகாலமாக உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அரசு கவனத்துடன் ஆய்வு செய்து வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவ துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கப்பூர்வ வழிகாட்டுதல்களையும், இந்த புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்த தேவைப்படும் வரையறைகளை தெளிவாக வகுக்கவும், முதல்வர் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களி்ன் பேராசிரியர்கள், மின்னணு தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள், துறை வல்லுநர்கள் இதில் இடம்பெறுவார்கள் என்று சட்டப்பேரவையில் இந்த 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அறிவித்தார்.

இதை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கையை மின்ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர், அரசுக்கு அனுப்பினார். இதற்கு ஒப்புதல் அளிப்பதுடன், இந்த இயக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர ரூ.13.93 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் பரி்ந்துரை செய்தார்.

இந்த இயக்கம் மூலம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி, புது முயற்சிகளை ஊக்குவித்தல், பயிற்சி, திறன் கட்டமைப்பை உருவாக்குதல், பங்குதாரர்கள், கூட்டாண்மையை உருவாக்கி சிறந்த செயல்பாடு, அறிவு மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை ஊக்குவிக்கப்படும்.

ஏ.ஐ. மூலம் நிர்வாக சிக்கல்களை தீர்த்தல், திட்ட அமலாக்க முகமைகளுக்கு ஏ.ஐ. அடிப்படையிலான தீர்வுகளை வழங்குதல், ஆய்வாளர்கள், புத்தாக்க நிறுவனங்கள் தங்களது யோசனைகளை அமல்படுத்த தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல், அரசின் தரவு பகிர்வதற்கான சட்டங்கள், தரவு பாதுகாப்பில் உரிய தீர்வுகளை வழங்குதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இதற்காக ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கியும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x