கோவையில் 2-ம் கட்ட வீட்டுமனை வழங்க கோரி முதல்வரிடம் பத்திரிகையாளர் சங்கத்தினர் மனு 


முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்த கோயம்புத்தூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர். 

கோவை: கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக சலுகை விலையில் வீட்டு மனை வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர், செய்தித்துறை அமைச்சர்,வருவாய்த்துறை அமைச்சர், முதல்வரின் தனிச்செயலர்கள் உள்ளிட்டோரை சந்தித்து மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ.5) கோவை வந்தார். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் புதன்கிழமை (நவ.6) சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த முதல்வரை பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக தந்து வந்தனர். அப்போது இரண்டாம் கட்ட சலுகை வீட்டுமனை தொடர்பாக வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வரிடம் கோயம்புத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பத்திரிகையாளர்கள் சத்யராஜ், சிவனேசன், மோகன்குமார் உள்ளிட்டோர் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை வழங்கி வரும் நிலையில், கோயம்புத்தூர் பத்திரிகையாளர்களுக்கு 2ம் கட்டமாக வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் பத்திரிகையாளர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்கியதை முதல்வரிடம் ஒருங்கிணைப்பு குழுவினர் நினைவு கூர்ந்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட இந்த தருணத்தில் கோயம்புத்தூர் பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்குவது காலத்துக்கும் நினைவு கூறத்தக்கது என தெரிவித்தனர். அவ்வாறு தரப்படும் வீட்டுமனை குடியிருப்பு பகுதிக்கு கலைஞரின் நூற்றாண்டு நினைவாக அவர் பெயரை சூட்ட வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவிக்கபட்டது. மனுவை பெற்று கொண்ட முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

x