இனாம் நில கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை: கரூர் வெண்ணெய்மலையில் மக்கள் போராட்டம்


கரூர்: கரூர் வெண்ணெய்மலை கோயில் இனாம் நில கட்டிடங்களுக்கு நோட்டீஸ், சீல் நடவடிக்கை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இனாம் நிலங்கள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் அப்பகுதிகளில் உள்ளன. கோயிலுக்கு சொந்தமான இனாம் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள காலி இடங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்புகள் வைக்கப்பட்டு 34 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று மீண்டும் சீல் நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கரூர் சாமிநாதபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக இன்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது, உதவி ஆணையர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அலுவலகத்தில் உதவி ஆணையர் (பொ) ரமணிகாந்தன் தலைமையில், கரூர் நகர டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற வாய்தா காலமான டிச.9-ம் தேதி வரை நடவடிக்கைகளை ஒத்திவைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவு என்பதால் நடவடிக்கைகளை ஒத்திவைக்க முடியாது, தொடரும் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் படிக்கட்டுகளிலும், செயல் அலுவலர் அலுவலகம் முன்பும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

x