டெல்லியில் நவம்பர் 13ம் தேதி தர்ணா: ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வரும் 13ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளது.

இது குறித்து இந்தக் குழுவின் துணைத் தலைவர் இளங்கோவன், உதவி செகரட்டரி ஜெனரல் மோகன் தாஸ் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுப்படுத்தப் பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும். மத்திய அரசு சுகாதாரத் திட்டம் இல்லாத பகுதிகளில் வழங்கப்படும் மருத்துவப் படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு சேவைக் காலம் கணக்கில் கொள்ளாமல் மத்திய அரசு சுகாதாரத் திட்ட வசதி வழங்க வேண்டும்.

அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்டுள்ள 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்களுக்கும் திருப்பி வழங்க வேண்டும்.

நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைப்படி, ஓய்வூதியர்கள் 65, 70, 75 வயதை எட்டும்போது 5 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். அடுத்தக் கட்டமாக வரும் 13ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளோம். இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தும் ஆதரவு கோரியுள்ளோம்" என்று அவர்கள் கூறினார்.

இப்பேட்டியின்போது, ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் மோகன், மாநில ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x