கடலூர்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் சுற்றித் திரியும் மாடுகளால் அதிகரிக்கும் விபத்து - ஆலோசனைக் கூட்டம்


கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டம் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் மாடுகள் வளர்ப்போர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி மன்ற தலைவர் பழனி பேசுகையில்,"சுமார் 34 பேர் தங்களது பகுதிகளில் இது போன்று மாடுகளை வளர்த்து வருகின்றனர். அவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விடக்கூடாது என்ற அறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. மீறும் நபர்களின் மாடுகள் பட்டியில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்" என்றார்.

அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், "அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதிகளில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகளில் திரிய விடுவதை தவிர்க்க வேண்டும். மீறி மாடுகள் சாலைகள் திரிந்து அதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டால் மாட்டின் உரிமையாளர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் மாடு ஒன்று குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்க தலைவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று துக்க நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழக்கூடாது. எனவே, மாடு வளர்ப்போர் மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விடாமல் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்" என்றார். இதேபோல் மாடுகள் வளர்ப்போர், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

x