மூப்பு அடிப்படையில் பணி வழங்குவதில் முரண்பாடு: ஆட்சியரிடம் ஆசிரியை புகார்


உதகை: மூப்பு அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டிய பணியை, வேறொரு ஆசிரியைக்கு வழங்கப்பட்டதை கண்டித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

உதகையை அடுத்த சாம்ராஜ் எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமாக சிவசைலம் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியராக சத்தியவதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியை பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் அந்த பதவிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் மதிப்பெண் பெற்ற சத்தியவதிக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளியில் சேர்ந்த வேறொரு ஆசிரியைக்கு அப்பணி வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்திடம் சத்தியவதி போராடியுள்ளார்.

இதையடுத்து, விசாரித்து பதவி வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பள்ளியில் அந்த ஆசிரியைக்கு பதவியை வழங்கி அதற்கான உத்தரவையும் வழங்கி பள்ளி நிர்வாகம் கையெழுத்து பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு பதவி வழங்கியதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியை சத்தியவதி மனு அளித்தார். அந்த மனுவில், "தனக்கு சேர வேண்டிய பதவியை வேறொரு ஆசிரியருக்கு வழங்கியது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்சினையில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

x