சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணையை முடித்து, ரயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இதில், 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழக ரயில்வே போலீஸாரும் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, அங்குள்ள ரயில் தண்டவாளம், சிக்னல் பகுதி, நிலையத்தின் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்பட சிக்னல் மற்றும் இயக்க பிரிவுகளில் ஆய்வு செய்தார்.
மேலும், ரயில் ஓட்டுநர்கள், சிக்னல், நிலை மேலாளர்கள் உட்பட 13 பிரிவு அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, அக்.16, 17 ஆகிய இரண்டு நாட்களில், சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் அவர் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணை முடிந்தபிறகு, 10 முதல் 15 நாட்களில் ரயில்வே வாரியத்திடம் இந்த அறிக்கையை அளிப்பார் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரயில்வே வாரியத்திடம் விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் அவர் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்த உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறும்போது, "தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, விசாரணை அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தும். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் தெரியவில்லை" என்றார்.