புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு தவெக மாநாட்டுக்கு முன்பே விஜய்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது: திருமாவளவன்


திருச்சி: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு, தவெக மாநாட்டுக்கு முன்னதாகவே விஜய்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தற்போது கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கெனவே நாங்கள் 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். இரு கூட்டணிகளை உருவாக்கியதில் விசிகவுக்கு பங்குண்டு.

இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு, இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை. விடுதலை சிறுத்தைகள் மீது திட்டமிட்டு சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம். கூட்டணி தொடர்பாக இனி யாரும் பேச வேண்டாம்.

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்து ஓராண்டாகிறது. இந்த விழாவுக்கு ராகுல் காந்தி, ரஜினிகாந்தை அழைக்கவும் திட்டமிட்டனர். தவெக மாநாடுக்கு முன்னதாகவே விஜய்-யை அழைக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர். அதற்கு நான் இசைவு தெரிவித்திருந்தேன்.

திராவிடம் என்பது கருத்தியல். நிலப்பரப்பை குறிப்பது அல்ல. பெரியாருக்கு முன்பே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. திராவிட கருத்தியல் இல்லை என்றால், சனாதனம் நம்மை விழுங்கியிருக்கும். இந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவை தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிடக் கருத்தியல்தான். இவ்வாறு திருமாவளவன் கூறினார்

x