மேட்டூர்: திமுக - காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது, என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசியச் செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கொடி பறக்கிறது என்றால் காங்கிரஸ் கட்சியின் கொடி தான். கூட்டணி குறித்து பேசும்போது, கிராம கமிட்டி உள்ளதா என கூட்டணி கட்சியினர் கேட்கின்றனர். 100 சதவீதம் கிராம கமிட்டி கட்டமைப்பை உருவாக்க உள்ளோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவை தலைமை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராமக் கமிட்டி அமைக்க இருக்கிறோம். சோனியா காந்தி பிறந்த தினமான டிசம்பர் 9-ம் தேதி ‘கிராம தரிசனம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளனர். கிராம தரிசனத்தை கன்னியாகுமரியில் முதலில் தொடங்க உள்ளோம். தை மாதத்தில் கிராம மற்றும பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திமுக- காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும் உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது.
காமராஜர் தேசத்தின் சொத்து, அவரை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால், சொந்தம் கொண்ட முடியாது. சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதை பாராட்டுவதும், வரவேற்பதும் ஜனநாயகம். கருத்துகளை சொல்வதால் இண்டியா கூட்டணியில் பிளவு, சலசலப்பு இருக்கு என எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பிரதமர் மோடி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான சதுர அடிகள் சீனாவுக்கு சென்று விட்டன. இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கை, வங்கதேசம், சீனா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் பகை நாடாக மாறி வருகின்றன.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து, காங்கிரஸ் நிர்வாகி சரவணன் வெளியிட்ட அறிக்கை அவரது கருத்து தான், கட்சியின் கருத்து இல்லை. அமரன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.