திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் தர்ம சாஸ்தா கோயிலில் கிராம மக்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். 2019-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், துளசேந்திரபுரத்தில் வசிக்கும் அவரது உறவினர்களில் சிலர், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அங்குள்ள அவரது குல தெய்வமான தர்ம சாஸ்தா கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதில், அமெரிக்காவை சேர்ந்த 2 பெண்கள், லண்டனைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய சுதாகர் என்பவர் கூறும்போது, "கமலா ஹாரிஸ் கடந்த முறை துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே, இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, வழிபாடு செய்தோம். அவர் வெற்றி பெற்றார். இந்த முறையும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெற்ற பின்னர், துளசேந்திரபுரம் கிராமத்துக்கு வந்து, மக்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.