மதுரை: 8 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட்டை, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக அகற்றி, அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் (34). எலெக்ட்ரீசியன் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெனட். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவதாக பிறந்த 8 மாத பெண் குழந்தைக்கு இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த மாதம் 28ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால், மருத்துவர்கள் நுரையீரலை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்தனர்.
அப்போது நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரிய வந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 1ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அந்தக் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.
அங்கு குழந்தைக்கு ஸ்கேன் எடுத்து மருத்தவர்கள் பரிசோதனை செய்தபோது, இடது நுரையீரலில் மூச்சுக் குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளதை உறுதி செய்தனர். 8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு பிராங்கோஸ்கோபி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதற்கு மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர்.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்தப் பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்த மருத்துவ நிபுணர் குழுவினர், சிறிய அளவிலான பிராங்கோஸ்கோபி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த அந்தப்பொருளை கடந்த 2-ம் தேதி அகற்றினர். அகற்றப்பட்ட இரும்பு ஊசிபோன்ற பொருள், குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் என உறுதி செய்யப்பட்டது. இச்சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று கடந்த 4-ம் தேதி நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசகுமார் மற்றும் டாக்டர் கருப்பசாமி, மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் சிவக்குமார் மற்றும் டாக்டர் பிரமோத் ஆகியோரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.
பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை: இது குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறுகையில்,"சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும் போது அவற்றை வயிற்றில் விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருள்களை விளையாட அனுமதிக்கக்கூடாது.
மேலும், குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிருக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்" என்று டீன் கூறினார்.