“சிறுவாணி அணை விவகாரத்தில் கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை” - அமைச்சர் கே.என்.நேரு தகவல்


அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கும் மழைநீர் வெளியேற்றப்படுவது தொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு அருகில் ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்

கோவை: சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறையினர் மூலம் கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

கோவை மாநகரில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும், பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (நவ.5) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "உப்பிலிபாளையம் அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், குறைந்த திறன் கொண்ட மோட்டார் முதலில் இருந்தது. தற்போது அதிக திறன் கொண்ட மோட்டார் மாற்றப்பட்டுள்ளது. இங்கு மூன்றாவதாக இன்னொரு நீரேற்றும் கிணறு அமைக்கப்பட உள்ளது. ரயில்வே துறையினர் இதற்கு இடம் தருவதாக கூறியுள்ளனர். லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப் பாதையிலும் புதிய மோட்டார் மாற்றப்பட்டுள்ளது. நீர் வெளியேற புதிய நீர்வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீர் உடனடியாக அக ற்றப்படும்.

சாலைப் பணிகள் : ”சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் சென்று தேங்குவதை தடுக்க, வடிகால் அமைத்து இறுதிக்கப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை பெய்தால் தண்ணீர் தேங்காத அளவுக்கு அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. மழை வருவதற்கு முன்னரே, அனைத்து வடிகால்களும் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் வந்துள்ளதால் 2 நாட்களுக்கு ஒருமுறை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.591.14 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறிச்சி - குனியமுத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணியில் 389 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இத்திட்டத்தில் 41,258 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கேரளாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை: 2022-23ல் 328.77 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2023-24ம் ஆண்டில் 335.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2024-25ம் ஆண்டில் 196.87 கிலோ மீட்டர் தூரத்துக்கும் கோவை மாநகரில் சாலைப் பணிகள் மாநகரில் முடிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள சாலைப் பணிகளையும் விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக மழை பெய்யும் பொழுது, அதை எதிர்கொள்வதற்கு ஏற்ப வழித்தடங்கள் இல்லை.

அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சிக்னல் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு அருகில் ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக சாலையில் குழிகள் தோண்டினால், அருகே தடுப்பு பேரிகார்டுகளை வைக்கவும், பணியை விரைவாக முடிக்கவும் அறிவறுத்தப்பட்டுள்ளது. சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறையினரும், கேரள அமைச்சகத்தினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வரும் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக ஆய்வின் போது, மேயர் ரங்கநாயகி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் சிவகுமார் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

x