விபத்தில் இறந்த பெண் காவலர் உடல் சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் தகனம்


பெண் போலீஸ் நித்யா (அடுத்தப்படம்) வேடசந்தூர் அருகே கொசவபட்டியில், பெண் போலீஸ் நித்யா உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழுங்க நடைபெற்ற இறுதி மரியாதை.

வேடசந்தூர்: மேல்மருவத்தூர் அருகே விபத்தில் இறந்த பெண் போலீஸ் உடல், வேடசந்தூர் அருகே கொசவபட்டியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் பகுதியில் நேற்று அதிகாலையில், காவல் உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ, காவலர் நித்யா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடலும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையே, காவலர் நித்யாவின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கொசவபட்டி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து இன்று கொசவப்பட்டியில் உள்ள மயானத்தில் காவலர் நித்யாவின் உடலுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் செல்வன் தலைமையிலான போலீஸார் மூன்று ரவுண்டுகளாக 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, நித்யாவின் உடல் எரியூட்டப்பட்டது. முன்னதாக உறவினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு நித்யாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

x