மதுரை: கரூர் வடசேரி அரியாறு பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் தலைவர் சுடலைக் கண்ணு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "குளித்தலை தாலுகா, வடசேரி கிராமத்தில் அமைந்துள்ள அரியாறு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இப்பகுதியில் சட்ட விரோதமாக தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இங்குள்ள ஆற்றுப் படுகையில் 10 மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டு திருச்சி நகருக்கு கடத்தப்படுகிறது.
இதனால் அரசுக்கு ரூ.50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும், மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். எனவே, வடசேரி அரியாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமனம் செய்யவும், இதற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல கோடி மதிப்புள்ள மணல் கடத்தப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் புகார் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.