அய்யப்பப் பக்தர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் திருடர்கள்: போலீஸார் எச்சரிக்கை


புதுச்சேரி: அய்யப்ப பக்தர்களை சைபர் க்ரைம் திருடர்கள் குறிவைத்து கேரள அரசின் காப்பீட்டில் சேர வரி கேட்பதாக புகார்கள் வருவதால் அதை நம்ப வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் இன்று கூறியதாவது: "சபரிமலை சீசன் தொடங்க உள்ளதால் அங்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.5 லட்சம் தருவதாக கேரளா அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தி அய்யப்பப் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு இதற்கான காப்பீட்டில் சேர வேண்டும் என்றால் பிராசசிங் கட்டணம், ஜிஎஸ்டி போன்ற வரிகளை கட்ட வேண்டும் என பணம் கேட்பதாக புதுவை சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்க்கு புகார்கள் வருகின்றன.

சைபர் குற்றவாளிகள் கேட்பது போன்று எந்த வரிகளையும் கேரளா அரசு கேட்கவில்லை. எனவே, சைபர் குற்றவாளிகள் தொடர்பு கொண்டு காப்பீட்டில் சேர்வதற்க்கு வரி போன்று ஏதேனும் கேட்டால் நம்ப வேண்டாம். மேலும், வயதானவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரை குறிவைத்து வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும், ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என வங்கி அதிகாரிகள் போல் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒடிபியை பெற்று அவர்களின் வங்கி கணக்கிலிருந்து சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடுகின்றனர். இது சம்பந்தமாக இதுவரை 50 புகார்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளன.

இதில், வயதானவர்கள் மற்றும் ஓய்வுவூதியம் பெறுவோர் ரூ 40 லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே, இதுபோன்று எந்த வங்கியும் தொடர்பு கொண்டு கேட்கமாட்டார்கள். எனவே, வயதானவர்கள் யார் கேட்டாலும் தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்க வேண்டாம். மேலும் பொதுமக்கள் இணையத்தில் வருகின்ற விளம்பரங்கள், வேலை வாய்ப்பு, அதிக பணம் தருகிறோம், உங்கள் பிள்ளைகளை கைது செய்துள்ளோம், உங்கள் பார்சலில் போதைப்பொருள் சென்றது, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம், உங்கள் சிம் கார்டை முடக்க போகின்றோம் போன்று எந்த தகவல்கள் வந்தாலும் நம்ப வேண்டாம்.

அப்படி ஏதேனும் தகவல் வந்தால் உடனடியாக 1930 மற்றும் 9489205246/0413-2276144 என்ற எண்ணிற்க்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இணைய வழி காவல் நிலையத்திற்கு www. cybercrime.gov.in ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்யலாம்" என்று சைபர் க்ரைம் போலீஸார் கூறினார்.

x