பாபநாசம்: பாபநாசம் வட்டம் மேட்டுத் தெருவில் உள்ள காவிரி - அரசலாறு அணை தலைப்பில் உள்ள ஷட்டர் ஒன்று சேதமடைந்துள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டுத் தெரு, காவிரி ஆற்றில் இருந்து பிரியும் அரசலாறு, காரைக்காலில் கடலில் கலக்கிறது. தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் கடலில் கலக்கும், காவிரி ஆறு நீர் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு நீர் மூலம் 85 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், காவிரி- அரசலாறு பிரியும் தலைப்புப் பகுதி ஷட்டர் மிகவும் சிதிலமடைந்தது.
இதனால், அங்கு நீட்டித்தல், விரிவாக்குதல், புணரமைத்தல் திட்டத்தின் கீழ், ரூ.60 கோடி மதிப்பில் காவிரியில் 26 ஷட்டர்களும், அரசலாற்றில் 15 ஷட்டர்களுடன் கூடிய நீரொலுங்கியுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அரசலாறு பிரியும் தலைப்பில் உள்ள 7-வது கண் ஷட்டரின் மேல் பகுதி திடீரென விரிசல் விட்டுச் சேதமடைந்துள்ளது. எனவே, நீர் வளத்துறையினர் உடனடியாக அப்பகுதியைச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அப்பகுதி விவசாயிகள், "காவிரி - அரசலாறு தலைப்பில் புதிதாக அணை கட்டப்பட்ட 2 ஆண்டுக்குள் ஒரு ஷட்டரில் உள்ள தண்ணீர் திறந்து மூடும் பகுதி சேதமடைந்து விரிசல் விட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், தொடர் மழை பெய்து, காவிரியில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டால், அரசலாற்று தலைப்பில் சேதமடைந்துள்ள ஷட்டரை மூடமுடியாமல் போகும்.
இதனால் மற்ற ஷட்டர்களின் நிலையும் கேள்விக்குறியாகும். எனவே, 3 மாவட்ட பாசனத்திற்கான நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி - அரசலாறு அணை தலைப்பு பகுதியில் சேதமடைந்துள்ள ஷட்டரை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதுமட்டுமில்லாது, மீதமுள்ள ஷட்டர்களையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று விவசாயிகள் கூறினர்.
இதுதொடர்பாக பேசிய நீர்வளத்துறை அதிகாரிகள்,"ஷட்டர் சேதமடைந்தது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக சீரமைக்கப்படும்" என்று அதிகாரிகள் கூறினர்.