என்எல்சியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை - காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் குற்றச்சாட்டு


கடலூர்: என்எல்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை; வடமாநிலத்தவருக்கே முன்னுரிமை வழங்கப் படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி-யான விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கடலூர் எம்.பி விஷ்ணு பிரசாத் இன்று கட்சிக் கொடி ஏற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "என்எல்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை; வட மாநிலத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி பொதுத்துறை நிறுவனம். வீடு, நிலம் கொடுத்த மக்களை ஏமாற்றி வருகிறது. அதிகாரிகள், தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேரைக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டது. ஆனால், தற்போது பத்தாயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் 6 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர்.

என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டமே நிலத்தடி நீர்பாதிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. என்எல்சி நெய்வேலியில் லேட்ரல் என்ட்ரி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் தான். தனியார் நிறுவனங்கள் என்எல்சி-க்கான தேர்வு வைக்கின்றனர். யாரை உள்ளே அழைக்க வேண்டுமோ அவர்களுக்கேற்ப பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

என்எல்சியில் பாதுகாப்பின்மை உள்ளது. இதனால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. என்எல்சி நிறுவனம் விரும்பும் தேவையுள்ளவர்களை இணைக்கும் லேட்ரல் என்ட்ரி முறையை நிறுத்த வேண்டும். அனுபவம் மிக்கவர்கள் உள்ளே இருக்கும் போது பதவி உயர்வு அளித்தால் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால் லேட்ரல் என்ட்ரி முறையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு உயர் பதவி அளிக்கப்படவில்லை. தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

என்எல்சியில் திட்ட தகவல்கள் சேகரிப்பு பிரிவு ஒன்று துவங்கப்பட்டு அதில் ஒருவரை நியமனம் செய்து அவருக்கு லட்சக் கணக்கில் ஊதியம் வழங்குகிறார்கள். ஆனால், நிலம் வழங்கிய விவசாயிக்கு ஒரு சென்ட்டுக்கு ரூ.1000 தரமறுக்கின்றனர். என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்த தற்போது தேவையில்லை. இது தொடர்பாக ஊடகத்திடமும், நாடாளுமன்றத்திலும் தெரிவிப்பேன்" என்று விஷ்ணு பிரசாத் கூறினார்.

x