சென்னை: தமிழகத்தில் அதிமுகவினர் மீதுநடத்தப்படும் முன்விரோத தாக்குதல்களை முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சி, அதிமுக நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர்.கணேசன் நேற்று காலை 5 மணியளவில் மர்ம நபர்களால் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தீபாவளியன்று அதே மாவட்டம், வாணியங்குடியில் உள்ள நாடக மேடையில்மணிகண்டன், அருண்குமார்மற்றும் ஆதிராஜா ஆகியோரை 6 பேர் கும்பல் வெட்டியதில், மணிகண்டன் சிகிச்சை பலனின்றிஇறந்தார். இதே நாளில் களத்தூரில்லட்சுமி அம்மாள் என்பவர்படுகொலை செய்யப்பட்டார்.
மற்றொரு நிகழ்வில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர 7-வது வார்டு அதிமுக செயலாளர் பி.ரமேஷ் என்பவரை, திமுக வார்டு உறுப்பினரின் கணவர் கோவி.சக்தி மற்றும் 2 நபர்கள் நவ.3-ம்தேதி இரவு 9 மணியளவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆயுதங்கள் கொண்டு பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரமேஷ், தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திறனற்ற திமுக ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருவதும், அதை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், அதிமுக நிர்வாகிகள் மீது கொலை மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. இதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையே பொறுப்பாகும். முதல்வர் ஸ்டாலின்இனியாவது இதுபோன்ற முன்விரோத தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.