மதுரை: ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் சரித்திரம் படைப்போம்’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிபட தெரிவித்தார். மதுரையில் தேமுதிக தேர்தல் பணி குழு செயலாளர் அழகர்சாமியின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியிலும், பின்னர் செய்தியாளர்களிட மும் பிரேமலதா பேசியதாவது: எம்ஜிஆரின் ரசிகர், தொண்டர், விசுவாசியாக விஜயகாந்த் இருந்தார். எங்களது பெற்றோர் இரட்டை இலைக்குதான் வாக்களிப்பர். எம்ஜிஆர் வேறு, கருப்பு எம்ஜிஆர் வேறு அல்ல. 2011-ல் சில துரோகிகளின் சூழ்ச்சியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. எத்தனை துரோகம், சூழ்ச்சிகள் வந்தாலும் அத்தனையையும் பழனிசாமியும், நானும் வீழ்த்தி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சரித்திரம் படைப்போம். 200 தொகுதிகள் அல்ல; 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் விஜய பிரபாகரன் சூழ்ச்சி மற்றும் துரோகிகளால் வீழ்த்தப்பட்டார். அவர் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார். புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கடக்க வேண்டிய பாதைகள் ஏராளமாக உள்ளன. எங்கள் கட்சியில் தேசியமும், திராவிடமும் உள்ளது. தேசியத்தில் திராவிடமும், திராவிடத்தில் தமிழகமும் உள்ளது. தமிழ் மொழியைக் காப்போம், பிற மொழிகளைக் கற்போம் என்று கூறியவர் விஜயகாந்த்.
விஜய்யின் மாநாட்டுக்கு முன்பும், பின்பும் சீமான் பேச்சில் மாற்றம் உள்ளது. அவர் அந்நியன் திரைப்படத்தின் அம்பியைப் போல் மாறி மாறி பேசுகிறார். எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.