திருச்சி செவிலியர் மீது தாக்குதல்: மதுரையில் ஆர்ப்பாட்டம்


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: திருச்சி மாவட்டம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதி மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ராஜி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் தாமரைச் செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசுகையில், “திருச்சி மாவட்டம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்.31 அன்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்ற செவிலியரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் செவிலியரை தள்ளிவிட்டு கடுமையாக தாக்கி காயங்கள் ஏற்படுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் செவிலியரை காப்பாற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

எனவே வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான சட்டங்கள் மூலம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.சந்திரபோஸ், மாவட்டத் தலைவர் க.நீதிராஜா, மருத்துவத்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆ.பரமசிவன், ஆனந்தவள்ளி, மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் பஞ்சவர்ணம், மாநகராட்சி உறுப்பினர் ஜென்னி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பாண்டிச்செல்வி ஆகியோர் பங்கேற்று பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரை ஆற்றினார். அச்சங்க மாவட்டப் பொருளாளர் சகாய டெய்சி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

x