போனஸ்: சமரசப் பேச்சுவார்த்தையை புறக்கணித்த வண்டலூர் பூங்கா நிர்வாகம்


ஸ்ரீபெரும்புதூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 192 பேர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் சட்டம் அனைத்தும் பொருந்தும் என்பதால், போனஸ் சட்டம் 1965ன் படி 20% போனஸை அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கோரி கடந்த 21ம் தேதி அறிஞர் அண்ணா பூங்கா தொழிலாளர் சங்கம் சார்பில் பூங்கா நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் நேரிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அறிஞர் அண்ணா பூங்கா தொழிலாளர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையரிடம் (சமரசம்)-1 தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2 கே-ன் கீழ் வழக்கின் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில், "பூங்காவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டம் அனைத்தும் பொருந்தும் என்பதால், போனஸ் சட்டம் 1965-ன்படி இந்த ஆண்டு போனஸ் தொகை வழங்க நிர்வாகத்தை தாங்கள் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நவ.4ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையரிடம் (சமரசம்)-1 போனஸ் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் இந்த பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் புறக்கணித்தனர். இதனால் கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் கூட்டம் வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் கூட்டத்தில் நிர்வாகம் சார்பில் பங்கேற்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

x