தூத்துக்குடி: மும்பையில் இருந்து புறப்பட்ட ஆளில்லா ரோந்து படகு 'மாதங்கி' இன்று காலை திட்டமிட்டபடி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கடற்படையின் சாகர்மாலா பரிக்ரமா திட்டத்தின் கீழ் சாகர் டிபென்ஸ் என்ஜினீயரிங் நிறுவனம்: மாதங்கி என்ற ஆளில்லா ரோந்து படகை உருவாக்கியுள்ளது. இந்த மாதங்கி ரோந்து படகு, மனித தலையீடு இல்லாமல் ஆளில்லாமல் இயங்கக் கூடியது. இந்த படகு அதன்மேம்பட்ட தன்னாட்சி தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இது சவாலான கடல் நிலைமைகளை நிர்வகிக்கவும், அதிக போக்குவரத்து உள்ள கடல் வழிகளில் பாதுகாப்பான பாதையையும் உறுதி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதங்கி ரோந்து படகு ஏற்கனவே மும்பையில் இருந்து கார்வார் வரை சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து தூத்துக்குடி வரை 1500 கிலோ மீட்டர் தூரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை பயணத்தை கடந்த 29ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஆளில்லா ரோந்து படகு மாதங்கி மும்பையில் இருந்து தூத்துக்குடியை நோக்கி பயணத்தை தொடங்கியது. இந்த மாதங்கி படகு இன்று காலை 11 மணியளவில் திட்டமிட்டபடி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாதங்கி ரோந்து படகை வ.உ.சி துறைமுக அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.