நாகர்கோவில்: மாத்தூர் தொட்டிப் பாலத்தின் காங்கிரீட் கைப்பிடிகள் பல இடங்களில் உடைந்த நிலையில் சீரமைப்புப் பணிக்காக நேற்று மூடப்பட்டது. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமம் அடைந்ததால் ஒரே நாளில் மீண்டும் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் மாத்தூர் தொட்டி பாலம் ஒன்று. காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும், நீளமானதுமான தொட்டி பாலம் என்ற பெருமை பெற்றது. இதை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சுற்றுலா வந்த மாணவி ஒருவர் சமீபத்தில் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருந்தார். இதைப்போல் பாலத்தின் மேல் பகுதியில் காங்கிரீட் கைப்பிடிகள் பல இடங்களில் சேதமடைந்திருந்தன. இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா பாலத்தின் மேல் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதற்கு தடை விதித்ததுடன், பாலத்தின் பழுதான பகுதிகள் சீரமைத்த பின்னர் அதில் சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் சுமார் 10 மீட்டர் தூரத்தில் பூட்டு போட உத்தரவிட்டார். இந்நிலையில் பாலத்தின் பல்வேறு பகுதிகள் கைப்பிடி சுவர்கள் பழுதடைந்து உள்ள நிலையில் நேற்று மதியம் அங்கு வந்த திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தொட்டிப்பாலத்தின் கேட்டை மூடி பூட்டு போட்டனர். இதனால் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் தொட்டி பாலத்தை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.
அத்துடன் மாத்தூர் தொட்டிப் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்லும் மலைகிராம மக்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதைதொடர்ந்து மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பூட்டை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மாலையில் மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.