தீபாவளியையொட்டி ஊழியர்களுக்கு கோயிலில் அசைவ பிரியாணி? - இந்து அறநிலையத்துறை விசாரணை


கோப்புப் படம்

புதுச்சேரி: தீபாவளியையொட்டி ஊழியர்களுக்கு அசைவ பிரியாணி தரப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஆளுநர் உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி நகர பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற கோயிலின் ஊழியர்கள், நிர்வாகத்திடம் துணி, பட்டாசு வழங்கும்படி கேட்டனர். கோயில் நிர்வாகம் ஊழியர்களுக்கு துணி, பட்டாசுடன், மட்டன், சிக்கன் பிரியாணியும் சேர்த்து வழங்கியதாக தகவல் பரவியது. இத்தகவல் பரபரப்பாகி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு புகாராகச் சென்றது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று, பிரசித்திபெற்ற அந்தக் கோயிலில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் விசாரணை நடத்தினார். கோயில் அலுவலகத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு கோயில் அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் தற்போது அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரனிடம் கேட்டபோது, “மணக்குள விநாயகர் கோயிலில் அசைவ பிரியாணி வழங்கப்பட்டதா என விசாரித்துவருகிறோம். கோயிலுக்கு வெளியில் ஊழியர்களுக்கு புத்தாடை, பட்டாசுடன், உணவும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கோயிலுக்குள் வழங்கப்பட்டதா என்பது குறித்தே விசாரிக்கிறோம். அதற்காக அங்குள்ள கண்காணிப்புக் கேமராக் காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். கோயில் நிர்வாகத் தரப்பில் தவறு நடைபெற்றிருந்தால் நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

x