கோவையில் ராணுவ பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடக்கம் - வடமாநில இளைஞர்கள் குவிந்தனர்!


கோவையில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொடங்குவதை முன்னிட்டு, பாலசுந்தரம் சாலையோரம் நேற்று தங்கிய வடமாநில இளைஞர்கள்.

கோவை: கோவையில் ராணுவ பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்குவதை முன்னிட்டு வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் முன்கூட்டியே திரண்டு வந்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பொதுப் பணி மற்றும் வீட்டு பராமரிப்பாளர், உதவியாளர், சமையலர் உள்ளிட்ட 10 வகை பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று (நவ.4) தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது. இன்றைய முகாமில் தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டையூ டாமன் மற்றும் லட்சத்தீவை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். 5-ம் தேதி ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களும், 6-ம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்

7-ம் தேதி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், 8-ம் சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த வர்களும் பங்கேற்கின்றனர்.

9-ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் பகுதிகளை சேர்ந்தவர்களும், 10-ம் தேதி கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.

இவர்களுக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். முகாமில் பங்கேற்க வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் நேற்று கோவைக்கு வந்தனர். அவர்கள் ஹோட்டல்கள், விடுதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பிளாட்பாரங்களில் தங்கியுள்ளனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x