இரும்புக்கட்டிலில் சிக்கி தந்தை, மகன் உயிரிழப்பு: திண்டுக்கல் சாணார்பட்டி அருகே பரிதாபம்


உயிரிழந்த கோபிகிருஷ்ணன், கார்த்திக்ரோஷன்

நத்தம்: சாணார்பட்டி அருகே இரும்பு கட்டிலின் காலில் சிக்கி கழுத்து நசுக்கியதில், கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தையல் தொழிலாளி கோபி கிருஷ்ணன் (35). இவரது மனைவி லோகேஸ்வரி. இவர் நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் ரோஷன் (9), யஷ்வந்த் (6) என இரு மகன்கள். மூத்த மகன் கார்த்திக் ரோஷனும், கோபி கிருஷ்ணனும் வீட்டின் மாடியில் உள்ள இரும்புக் கட்டிலிலும், இளையமகன் யஷ்வந்த் தனது தாய் லோகேஸ்வரியுடன் வீட்டின் தரைத் தளத்திலும் தூக்குவது வழக்கம். நேற்று இரவு வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றுள்ளனர்.

காலையில் லோகேஸ்வரி, மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதற்காக புறபட்டுக்கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் மாடியில் தூங்கச் சென்ற கார்த்திக் ரோஷனும் கோபி கிருஷ்ணனும் எழுந்து வராததால் சந்தேகமமடைந்த லோகேஸ்வரி, வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் விழுந்து கிடந்த கட்டிலில் இறந்தது கிடந்தது தெரியவந்தது. இது குறித்து சாணார்பட்டி போலீஸாருக்கு லோகேஸ்வரி தகவல் அளித்தார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இரும்புக் கட்டிலின் கால் பொருந்தப்பட்டிருந்த நட்டுக்கள் விலகி கட்டில் காலின் மேல் பகுதி, கட்டிலில் படுத்திருந்த கோபிகிருஷ்ணன், கார்த்திக் ரோஷன் ஆகியோர் தலையை நசுக்கியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரது உடல்களையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

x