பயிற்சி மருத்துவர்களுக்கு நிர்ணயித்த உதவித் தொகையை தனியார் கல்லூரிகள் தருவதில்லை: முதல்வரிடம் அதிமுக புகார்


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு நிர்ணயித்த உதவித் தொகையை தனியார் மருத்துவக் கல்லூரிகள் தருவதில்லை என புதுச்சேரி முதல்வரிடம் அதிமுக புகாரளித்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பயிற்சி மருத்துவர்களுடன் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டுகள் மருத்துவக் கல்வி முடித்து ஐந்தாம் ஆண்டு பயிற்சி மருத்துவப் பணி (CRMI) புரியும் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. அதை பின்பற்றி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணைப் படி இளநிலை மருத்துவ பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் உதவித் தொகையை தனியார் கல்லூரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை பின்பற்றி அரசு மருத்துவக் கல்லூரியான இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி இளநிலை பயிற்சி பணி செய்யும் மாணவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குகிறது.

ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் மாதம் ரூ.5 ஆயிரமும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மாதம் ரூ.10 ஆயிரமும் உதவித் தொகையை குறைத்து வழங்குகின்றன. அதேபோன்று பல்வேறு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் மருத்துவ பயிற்சி பணி செய்யும் (CRMI) மாணவர்களுக்கு வெறும் ரூ.2,500 மட்டும் வழங்கி மாணவர்களை ஏமாற்றுகின்றனர். இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

x