ஆரோவில்லில் ரூ.40 லட்சத்தில் உலகத்தர கூடைப்பந்து மைதானம் திறப்பு: சுற்றியுள்ள கிராமத்தினருக்கும் அனுமதி! 


புதுச்சேரி: புதுச்சேரி அருகிலுள்ள ஆரோவில்லில் ரூ.40 லட்சத்தில் உலகத் தரமான கூடைப்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது. ஆரோவில்வாசிகள் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இதைப் பயன்படுத்தலாம் என அறக்கட்டளை செயலர் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் ரூ.40 லட்சத்தில் நவீன கூடைப்பந்து மைதானம் இன்று திறக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி ரவி, தனிப் பணி அதிகாரி டாக்டர் சீதாராமன், பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜன்மஜெய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுபற்றி அறக்கட்டளைச் செயலர் ஜெயந்தி ரவி கூறுகையில், ''உலகத் தரமான கூடைப்பந்து மைதானம் ஆரோவில்லில் அமைக்கும் பணி கடந்த 2018-ல் துவங்கியது. விளையாட்டின் மூலம் இளைஞர்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு இப்பணி விரைவுப்படுத்தப்பட்டது. தற்போது ரூ.40 லட்சத்தில் இப்பணி நிறைவடைந்துள்ளது.

இந்தக் கூடைப்பந்து மைதானத்தை ஆரோவில்லில் வசிப்போர் மட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தலாம். சர்வதேச தரத்திலான பயிற்சியை இம்மைதானத்தில் வழங்கும் நோக்கமும் எங்களுக்கு உள்ளது. இத்திடலானது உள்ளூர் விளையாட்டு வளர்ச்சிக்கும் முன்னோடியாக மாறும். தரமான பொருட்களை பயன்படுத்தி இந்த மைதானத்தை வடிவமைத்துள்ளோம்" என்றார். திறப்பு விழா நிகழ்வில் பெண்கள் அணி பங்கேற்ற நட்பு விளையாட்டு போட்டியும் நடந்தது.

x