அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்


ஶ்ரீவில்லிபுத்தூர்: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் மரியா டேவிட் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை முன்னிலை வகித்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். முன்னறிவிப்பு இன்றி 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தியது மற்றும் சொத்து வரிக்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்.

பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணமில்லா கழிப்பறையை தூய்மைப்படுத்தி பராமரிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

x