பொன்னேரி: மணலி அருகே வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த 3 சாலை விபத்துகளில் தந்தை, மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
எண்ணூர், வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற டேனியல்(40). பெயின்டரான இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள உறவினர்வீட்டுக்கு தன் மனைவி ஸ்டெல்லா(30), மகன் மோசஸ்(10), மகள்ஸ்வீட்டி(8) ஆகியோருடன் சென்றுவிட்டு நேற்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, சாத்தங்காடு பகுதியில், மணலி விரைவு சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் மீது மோதியது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசஸ் திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஸ்டெல்லா, ஸ்வீட்டி ஆகிய இருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், மணலி புதுநகர் அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி பகுதியை சேர்ந்த வினோத்(23) நேற்று காலை திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரிலிருந்து, தன் நண்பர் கிரண்(23)என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெள்ளிவாயல்சாவடிக்கு சென்று கொண்டிருந்தார்.
சாத்தங்காடு, மணலி விரைவு சாலையில், பக்கிங்காம் கால்வாய் அருகே திரும்பியபோது எதிரே வந்த தண்ணீர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதனால், வினோத், கிரண் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, லாரியின் டயரில் சிக்கி படுகாயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கிரண்,சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் முகமதலி(30) நேற்று காலை மோட்டார் சைக்கிளில் மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர், மணலி அருகே திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது.இதில், படுகாயமடைந்த முகமதலிசம்பவ இடத்திலேயே இறந்தார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்