திருவள்ளூர்: தமிழக துணை முதல்வரும், திமுகஇளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள்விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுகஇளைஞரணி சார்பில் கடந்த மாதம் 14-ம் தேதிமுதல், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
47 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடர் நிகழ்ச்சியில், 23-வது நாள் நிகழ்ச்சியாக, திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் குதிரைப் பந்தயம் மற்றும் மகளிருக்கான கபடி போட்டி ஆகியவை நேற்று நடைபெற்றன. இதில், திமுகவின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சருமான சா.மு.நாசர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குதிரை ரேக்ளா பந்தயம் மற்றும் மகளிருக்கான கபடி போட்டி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் உமாமகேஷ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற ரேக்ளா குதிரைப் பந்தயம் சிறிய, நடுத்தர, பெரிய குதிரைகள் என 3 பிரிவுகளாக நடைபெற்றது.இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 37 குதிரைகள் பங்கேற்றன.
பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த குதிரைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.