தாம்பரம்: கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் போட்டோ சூட்எடுத்தபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த திமுக பிரமுகர் பாலாஜி. இவரது மகன் டெல்லி பாபு (எ) விக்கி (19) தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் திமுக மாணவரணி நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் எருமையூர் என்ற இடத்தில் சர்வீஸ் சாலையில் பைக்ஓட்டுவது போல் பல வடிவங்களில் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பூந்தமல்லி, முத்துக்குமரன் நகர் பகுதியை சார்ந்த தேஜாஸ் (18) என்பவர் ஓட்டிவந்தபைக் இவர் மீது வேகமாகமோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட டெல்லிபாபு சாலையோர மின்கம்பத்தில் மோதி தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த சோமங்கலம் போலீஸார் உடலைமீட்பு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்டலூர் வெளிவட்ட சாலையில் தினமும் ஏராளமான இளைஞர்கள் பைக்ரேஸ் நடத்துவது, போட்டோசூட் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெளிவட்ட சாலையில் பல்வேறு காவல் நிலைய எல்லைகள் வருவதால் யாரும் சரியாக கவனிப்பதில்லை. எனவே, போக்குவரத்து போலீஸார், இப்பகுதியில் அதிகமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.