மேட்டூர்: தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: திமுகவில் அரசியலிலும், அதிகாரத்திலும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் முன்னுக்கு வர முடியும். கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வரானார். மிசா காலத்தில் ஸ்டாலினுடன் சிறையில் சித்ரவதை அனுபவித்த மூத்த நிர்வாகிகள் யாரும், தற்போது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் அவரது கண்ணுக்குத் தெரிகிறார்கள்.
திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால், ஜனநாயகம் இருப்பதாக கருதலாம். ஆனால், தற்போது திமுகவில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. மூத்த அமைச்சர்களை உதாசீனப்படுத்திவிட்டு, உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளனர். ஆனால், ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும்.
திமுக அமைச்சர்களுக்கு இதுவரை சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. தற்போது, மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் எனும் பெயரில் அமைச்சர் ராஜேந்திரன் மனுக்களை வாங்கி வருகிறார். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் கூறுகிறார்.
எடப்பாடி தொகுதியில் மட்டும் 3,000 மனுக்கள் வந்துள்ளதாக கூறிய அமைச்சர், என்னென்ன மனுக்களை மக்கள் வழங்கினர் என்று கூறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துமாறு எடப்பாடி தொகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக முதல்வரால் இதைத் தடுக்க முடியவில்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு, அதிமுக மூன்றாக, நான்காக பிரிந்துபோய்விட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறார். நாங்கள்தான் அதிமுக. இதை கடந்த மக்களவைத் தேர்தலில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
கூடுதல் வாக்குகள்... அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக பிரிந்து இருப்பதால் வாக்குகள் குறையும் என்றனர். ஆனால், மக்களவைத் தேர்தலில் ஒரு சதவீதம் கூடுதல் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி, 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பி, தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். இவ்வாறு பழனிசாமி பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது, "அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினோம். அப்படி இருக்கும்போது தவெக தலைவர் விஜய், அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது, மற்றவர்களுக்கு ஆதங்கமாக இருக்கிறது. திமுக கூட்டணி பலமாக இருப்பதாகக் கூறுவதை நம்ப முடியவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக எந்தபோராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணிக் கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகின்றன. கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை எப்படி ஏற்க முடியும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருபோதும் கட்சியில் சேர்க்க மாட்டோம்" என்றார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.