சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மழைக்காலங்களில் பெய்யும் மழையால் பல இடங்களில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கியிருப்பதும், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதும் வழக்கமானது. அதேபோல் மழைநீர், குடிநீர், கழிவுநீரில் கலப்பதும், சாலைகள் பழுதடைவது, போக்குவரத்து தடைபடுவது உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும். முன்னெச்சரிக்கையாக அரசு செயல்பட்டால் மட்டுமே பெரும் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி சென்னை உட்பட தென் மாவட்டப் பகுதிகளில் மக்களை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு தேவை. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் மழைக்காலப் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.