கோவை: குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தப்பட்டால், சன்மானத் தொகை ரூ.2,000 வழங்கப்படும் என, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாக உள்ளது. அதற்கு முன் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது. குழந்தை திருமணம் என்பது ஆணுக்கு நடந்தாலும் அல்லது பெண்களுக்கு நடந்தாலும் குழந்தைகளின் உரிமைகளை அத்துமீறும் செயலாகவே உள்ளது.
குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும் அத்தகைய திருமணங்கள் நடத்துபவர்கள் மீது அதிகபட்ச தண்டனை அளிப்பதற்கு இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடத்துபவர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098, மகளிர் உதவி மைய இலவச தொலைப்பேசி எண்:181 மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நலவிரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைத் திருமணங்களை தடுக்கும் பொருட்டு, குழந்தைத் திருமணம் குறித்து தகவல் அளிப்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தகவல் அளிப்போருக்கு அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டால், சன்மானத் தொகை ரூ.2,000 ஆட்சியர் பொது நிதியிலிருந்து வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.