ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட செண்பகத்தோப்பு - வ.புதுப்பட்டி இடையே 9 கி.மீ தூர மலைப்பாதையில் இன்று முதல் மலையேற்றத்திட்டம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளதாக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் தமிழ்நாடு மலையேற்றத்திட்டம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 13 எளிதான பாதைகள், 16 மிதமான பாதைகள், 11 கடினமான பாதைகள் என 40 மலையேற்ற வழித்தடங்கள் தமிழ்நாடு வன மற்றும் உயிரின விதிகள்(மலையேற்ற ஒழுங்குமுறை) 2018-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த வழித்தடங்களில் மலையேற்றம் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் வனத்துறை மூலம் மலைவாழ் மக்கள் மற்றும் மலையடிவாரத்தில் உள்ள உள்ளூர் இளைஞர்களை வழிகாட்டிகளாக நியமித்து, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரையிலான 9 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையில் மிதமான பாதை பிரிவில் இடம் பெற்றுள்ளது. இவ்வழித்தடத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்கனவே இரு முறை புத்தாக்க பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் செண்பகத்தோப்பு - வ.புதுப்பட்டி இடையே மலையேற்றம் மேற்கொள்ள நபர் ஒன்றுக்கு ரூ.2,299 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் இன்று முதல் மலையேற்றப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வழித்தடத்தில் வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் www.trektamilnadu.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.