இளையான்குடி: இளையான்குடியில் ஒரே மருத்துவர், ஒரு தூய்மை பணியாளருடன் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அவசர சிகிச்சை பிரிவுகூட இல்லாததால், நோயாளிகள் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரி வில் 30 படுக்கைகள் உள்ளன. இம்மருத்துவமனையில் 12 மருத் துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக தலைமை மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். அவ்வப்போது. வேறு மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் மாற்றுப் பணியில் வந்து செல்கிறார். அவரும் தொடர்ந்து பல நாட்கள் வருவதில்லை.
ஒரு மருத்துவர் மட்டுமே புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவை கவனித்து வருகிறார். இதனால், புறநோயாளிகள் பிரிவில் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் சூழ்நிலை உள்ளது. மேலும், 12 செவிலியர்களுக்கு 8 பேர், 8 மருத்துவப் பணியாளர்களுக்கு 4 பேர் மட்டுமே உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற பலரும் தயங்குகின்றனர். சிதிலமடைந்த அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் 4 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், பெரும்பாலும் அவசர சிகிச்சைக்கு வருவோர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பரிந் துரை செய்யும் நிலை உள்ளது. ஒரேயொரு தூய்மை பணியாளர் மட்டுமே இருப்பதால், அவர் மருத்துவமனையை சுத்தம் செய்ய சிரமப்படுகிறார்.
இதுகுறித்து அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் நாகூர்மீரா, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ‘இளையான்குடி பேரூராட்சி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இளையான்குடி வட்ட மருத்துவமனை பயன்பட்டு வந்தது. ஆனால், அங்கு மருத்துவர்கள், ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் சிவகங்கைக்கு செல்லும் நிலை உள்ளது.உடனடியாக போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.