ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலையில் செய்து வரவும் தொடர் மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, ராக்காச்சி அம்மன் கோயில், ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறுகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் சாஸ்தா கோயில் அருவி, அய்யனார் கோயில் அருவி, ராக்காச்சி அம்மன் கோயில் அருவி, செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை அருவி, அத்திகோயில், தாணிப்பாறை உள்ளிட்ட 11 நீர் வீழ்ச்சிகளும், சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை மற்றும் பல்வேறு காட்டாறுகள், நீரோடைகள் உள்ளன.
இவற்றில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் நீர்வரத்து இருக்கும் என்பதால் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக வருகின்றனர். கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
வெள்ளிக்கிழமை ரக்காச்சி அம்மன் கோயில் அருவியில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 20 பெண்கள் உட்பட 150 -க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அதன்பின் தீயணைப்புதுறையினர் வந்து கயிறு கட்டி பொதுமக்களை மீட்டனர். இதனால் சனிக்கிழமை அருவிகளுக்கு செல்லும் மக்களை தடுப்புகள் அமைத்து வனத்துறையினர் தடுத்தனர்.
அய்யனார் கோயில் ஆற்றில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், 9 பேர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு துறை 2 மணி நேரம் போராடி பொதுமக்களை மீட்டனர்.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அய்யனார் கோயில், ராக்காச்சி கோயில் செண்பகத்தோப்பு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அருவி மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.