கோவை: மருதமலை ஐ.ஓ.பி. காலனி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி நுழைந்து வருகின்றன. ஐ.ஓ.பி. காலனி பகுதியில் கடந்த 31-ம் தேதி இரவு யானை ஒன்று குட்டியுடன் வந்தது. அப்போது கிஷோர் என்பவரின் வீட்டு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. போர்டிகோவில் நின்ற கார்களை துலாவிய யானைகள், வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த அலங்கார தாவரங்களை உட்கொண்டன.
திடீரென வீட்டின் முன்புற கதவை முட்டி தள்ளி, உள்பக்கமாக தும்பிக்கையை விட்டு உணவைத் தேடின. உடனே சத்தம் கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் உள்ளிட்டோர் மேல்மாடிக்கு சென்று தப்பினர். சிறிது நேரம் வீட்டு வளாகத்தில் நின்றிருந்த யானைகள் பின்னர் அங்கிருந்து சென்றன.
இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்டா குழுவினர் சென்று யானைகளை வனப்பகுதியில் விரட்டி விட்டனர். யானை முன்கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்சிகள் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலாளி உயிரிழப்பு: கோவை வேலாண்டிபாளையம் யமுனா நகரை சேர்நதவர் சிவராஜ் (33). கூலித்தொழிலாளியான இவர் தனது நண்பர்களுடன் கடந்த 30-ம் தேதி இரவு தாளியூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை, சிவராஜ் உள்ளிட்டோரை துரத்தியது. இதில் மதுபோதையில் தப்பி ஓட முடியாமல் இருந்த சிவராஜை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சின்ன தடாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வனச்சரகர் அருண் கூறும்போது, “தீபாவளி பண்டிகை காலங்களில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்தக் கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதை மீறி சிலர் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால் மனித-யானை முரண்பாடு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறு கின்றன. வனத்துறை அறிவுறுத்தலை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.