சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் சாலையில் உள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் நவ.4-ம் தேதி முதல்வரால் தொடங்கப்படவுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ முன்னேற்பாடுப் பணிகள், பெரியார் நகர் பேருந்து நிலையம், அண்ணாநகர் கிழக்கு பகுதி நூலக கட்டுமானம் ஆகியவற்றை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
பணிகள் விரைவுபடுத்தப்படும் - பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முடிச்சூரில் ரூ.42 கோடியில் கட்டப்படும் ஆம்னிபேருந்து நிலையத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவுற்றுள்ளன. இதனை விரைவில் முதல்வர் திறந்து வைப்பார். அதிமுக ஆட்சியில் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை வேகப்படுத்தி, அடுத்த மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பெரியார் நகர், திரு.வி.க.நகர்,முல்லை நகர், அம்பத்தூர், ஆர்.கேநகர் போன்ற 7 இடங்களில் புதிய நிலையங்கள் மற்றும் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் கட்டப்படும் பெரியார் நகர் பேருந்து நிலையம் வரும் ஜனவரி அல்லதுபிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும். மொத்தமாக சென்னை மற்றும்புறநகரில் 18 புதிய பேருந்து நிலையங்களை கட்டமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 79 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. 7 முருகன் கோயில்களில் பெருந்திட்ட வரைவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவின் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.