சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திராவிடம்-தேசியம் ஆகியவை தனது இரண்டு கண்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறுவது ஏன், இரண்டும் எப்படி சமமாகும்? இரு மொழிக் கொள்கை என்கிறார் விஜய். அடுத்தவர் மொழி, எப்படி எனக்கு மொழியாகும், எனது கொள்கை, என்னுடைய தாய்மொழி தான். தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி. இந்தி உட்பட உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழிகள். அவற்றை விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடிக் கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை.
அதேபோல, பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 விழுக்காடு என்பதை ஏற்றுக்கொள்கிறாரா, எதிர்க்கிறாரா,அருந்ததியருக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீட்டை எதிர்க்கிறாரா, ஏற்றுக்கொள்கிறாரா, திராவிடத்தை வாழவைக்கவா கட்சியை ஆரம்பித்திருக்கிறார், அதற்குத்தான் ஏற்கனவே கட்சிகள் இருக்கின்றனவே, புதிய கட்சி எதற்கு?
எனவே, தவெக தலைவர் விஜய் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். அண்ணன்-தம்பி என்ற உறவு வேறு. கொள்கைமுரண் வேறு. என்னைப் பெற்றதாய்-தந்தையாகவே இருந்தாலும், எங்களது கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். பகை பகைதான்.
என்னை காட்டிலும் அரசியல்அனுபவம் கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், தவெகவுடன் கூட்டணி என்ற சிறுபிள்ளைத்தனமான தவறை செய்யக்கூடியவர் அல்ல. அவர் தவறு செய்ய மாட்டார்.