விஜய் நடத்திய மாநாடுதான் திமுக கூட்டணியை பாதுகாக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து


நாகர்கோவில்: விஜய் நடத்திய மாநாடுதான் திமுக கூட்டணியை பாதுகாத்து வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: யாராலும் புரிந்துகொள்ள முடியாத நிலையில், மாநாட்டை நடத்தி முடித்துள்ளார் தவெக தலைவர் விஜய். தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆட்சியில் பங்குபெறுவோம் என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று முதல்முறையாக விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் களப் பணியாற்ற வேண்டும்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதேபோல, என்.டி.ராமாராவ் ஆந்திராவில் கட்சி தொடங்கியபோது, அங்குள்ள மக்கள் அவரை வாழும் கண்ணனாகவே பார்த்தார்கள்.

தமிழக அரசியல் உறுதியற்ற நிலையில் உள்ளது. ஆளும் திமுக மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுக ஆட்சிக்கு வருவதிலும் குழப்பம் உள்ளது. தற்போது, விஜய் நடத்திய மாநாடுதான், திமுக கூட்டணியை பாதுகாத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

x